Sunday, 17 June 2012

சூரிய ஒளியில் இயங்கும் நவீன படகு

சூரிய ஒளியினால் நமக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன. பெரும்பாலும் பகலில் நடைபெறும் அனைத்து பணிகளும் சிறப்பாக நடந்து முடிய சூரியனின் அணுக்கிரகம் மிகவும் அவசியம். அதே போல் சூரிய ஒளியின் மூலம் ஏராளமான ஆற்றல்கள் நமக்கு கிடைத்திருக்கின்றன. இதற்கு எடுத்துக்காட்டாக சூரிய ஒளிக்கார்கள், சூரிய ஒளி மின்சாரம் ஆகியவற்றைக் கூறலாம். சூரிய ஒளியின் மூலம் மின்சார ஆற்றல் என்பது தற்பொழுது மிகவும் பிரபலமாகி வருகிறது. வருங்காலத்தில் ஏற்படும் மின்சார பற்றாக்குறையை போக்க நாம் சூரியனை சார்ந்திருக்க வேண்டிய நிலை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. உலகம் முழுவதும் சூரிய வெப்பத்தை முழுமையாக பயன்படுத்தி தேவையான மின்சாரத்தை எப்படி பெறலாம்? என்பது பற்றி பல்வேறு ஆராய்ச்சிகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் எடுப்பதன் முக்கிய நோக்கம் மாசுக்கட்டுப்பாடுதான். இதனால் கார்பன் கழிவு மற்றும் இரைச்சல்கள் தவிர்க்கப்படுகிறது. மேலும் ஆற்றல் தட்டுப்பாடு நீக்கப்படுகிறது. ஒளியில் கிடைக்கும் ஆற்றல் மூலம் மகத்தான சாதனைகளை நம் விஞ்ஞானிகள் சாதித்து கொண்டிருக்கின்றனர். அதில் ஒன்று, இங்கிலாந்தில் சூரிய ஒளியின் மூலம் இயங்கக்கூடிய படகு. இதில் அறிவியல் தத்துவங்களின் நவீன தொழில்நுட்பம் புகுத்தப்பட்டுள்ளது. சுமார் 42 பயணிகளை ஏற்றிச் செல்லும் வகையில் படகை தயாரித்துள்ளனர்.

இந்த படகு பற்றி ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறும் போது, 'இந்த ஆராய்ச்சி அதிசயமான ஒன்றுதான். சூரிய ஒளியில் இயங்கும் எத்தனையோ இயந்திரங்கள் வந்துவிட்டன. இது சற்று வித்தியாசமான ஒரு கண்டுபிடிப்பு. இது எதிர்காலத்தில் சூரிய ஒளியில் இயங்கும் போக்குவரத்து வாகனங்களுக்கு ஒரு முன்உதாரணம் என்றும் சொல்ல முடியும். வருங்காலத்தில் சிறிய கப்பல், இதைவிட பெரிய அளவிலான படகுகளை தயாரிக்க இந்த ஆராய்ச்சி உதவும். இதனால் கடல் போக்குவரத்துக்கு அதிக அளவில் எரிபொருள்களை பயன்படுத்த வேண்டியதில்லை. போக்குவரத்து செலவும் பெருமளவில் குறையும். மேலும் மாசுக் கட்டுப்பாடு ஏற்படுகிறது. தேவையற்ற நச்சுப் புகைகள் உருவாவது தவிர்க்கப்படுகிறது. இதனால் சுற்றுப்புறத் தூய்மை பாதுகாக்கப்படுகிறது,'' என்றார்.

ஜெர்மனியைச் சேர்ந்த வடிவமைப்பாளரும், விஞ்ஞானியுமான கிரிஸ்டோப் பெலிங் என்பவர் கூறுகையில், உலகிலேயே இதுதான் தற்பொழுது மிகவும் அதிநுட்பம் வாய்ந்த படகு. இது முற்றிலுமாக உலோகத்தால் தயாரிக்கப்பட்டது. ஆயுட்காலமும் கெட்டி. இது எதிர்காலத்தில் உருவாகப்போகும் சூரிய ஒளி ரயில் மற்றும் இதர போக்குவரத்து வாகனங்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும். இதனுடைய அதிகபட்ச பயண தூரம் 82 மைல்கள்.

அதாவது 132 கி.மீட்டர். பயண நேரத்தில் புகை, தூசி போன்றவைகளை ஏற்படுத்தாது. மேலும் அமைதியான பயணத்தை தரும். ஏனென்றால் இதில் உள்ள மோட்டார் இயந்திரங்கள் இரைச்சலைக் கூட ஏற்படுத்தாது. அதாவது கார்பன் கழிவுக்கே வேலையில்லை. ஏனென்றால் முற்றிலும் இதனுடைய ஆற்றல் சூரிய ஒளியிலிருந்தே பெறப்படுகிறது. மேலும் அதிக வெயில் இல்லாவிட்டாலும், மழைக்காலங்களாக இருந்தாலும்கூட ஓரளவு சூரிய ஒளி இருந்தால் போதும். அதனை உள்வாங்கி இயங்கும் தன்மை கொண்டது', என்றார் கிரிஸ்டோப் பெலிங். இவர்தான் முதன் முதலாக உலகிலேயே மிகப்பெரிய சூரிய ஒளி படகை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

'டீசல் படகுடன் ஒப்பிடும்போது, இது ஆண்டிற்கு 5000 பவுண்டு கார்பன்-டை-ஆக்சைடு வெளியேற்றத்தை தடுக்கிறது' என்கிறார் மற்றொரு ஆராய்ச்சியாளர் கேவின் கோம்ஸ். இவர் லண்டனைச் சேர்ந்த ஒரு அறிவியல் நிறுவனத்தைச் சேர்ந்தவர்.


இந்த சூரிய ஒளியில் இயங்கும் படகின் விலை 4 லட்சத்து 21 ஆயிரம் அமெரிக்க டாலர்கள். அதாவது இந்திய ரூபாயில் சுமார் ஒரு கோடியே 90 லட்சம் ஆகும். இது சாதாரண டீசல் படகைவிட 20 சதவிகிதம் அதிக விலை கொண்டது. இருந்தாலும் பிற்காலத்தில் ஏற்படும் சந்தை போட்டியில் இதன் விலை குறையலாம். மேலும் எரிசக்தியில் இயங்கும் படகுகளைவிட ஏராளமான நன்மைகள் இதில் கிடைக்கின்றன. இது மணிக்கு 5 மைல்கள் (8 கிலோ மீட்டர் தூரம்) பயணம் செய்யும் திறன் கொண்டது. இதன் மேற்கூரையில் பொருத்தப்பட்டுள்ள 27 சூரிய ஒளியை உள்வாங்கும் சட்டம் (Solar Panel Roof) இந்த படகினை இயக்க தேவையான ஆற்றலை அளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். என்ன சிரிக்கறீங்களா? சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...

FAVOURITE TITLES

Related Posts Plugin for WordPress, Blogger...